திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி பொது செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயராம், தெற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் மணிவேல், மேற்கு மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ள 4 தொகுப்பு சட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியம் போன்ற பல்வேறு நல வாரியங்கள் கலைக்கப்படும் பேராபத்து உள்ளது. பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் குறைக்கப்பட்டு தினக்கூலி தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இரவு நேர பணியில் பெண்கள் தொடர்வதால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டத்தை திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.