ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரின்போது துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் நட்பு நாடான துபாய் மீது ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றங்களால் மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,துபாயிலிருந்து, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்க பர்மிங்காம் செல்ல, இந்தியாவை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமான நிலையத்தில் காத்திருந்தார்.

ஆனால், ஈரானில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதால் துபாயில் இருந்து விமானங்கள் புறப்படவில்லை. 8 மணி நேரம் காத்திருந்தும் விமானங்கள் செல்லாததால், விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு சிந்து தள்ளப்பட்டார். இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரின் போது துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்தடைந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில், கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. துபாயில் இருந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்தடைந்தேன். கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.