சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகையுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. மாநிலங்களவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. கார்கேவின் அறிவுறுத்தலின்படி ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதாகக் கூறப்படுகிறது. அதே போல சென்னையில் உள்ள ப. சிதம்பரம் இல்லத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு ப. சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் ஒரே காரில் சென்றது குறிப்பிடத்தக்கது.