மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், நேற்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மகராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி இருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க, சிவசேனா மற்றும் என்.சி.பி. கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அங்கு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் காவதியாகி இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.

மொத்தம் 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மீதமுள்ள மாநகராட்சிகளுக்கான டிசம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் டிசம்பர் 3-ம் தேதி, அதாவது நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். அதாவது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் முன்பே, முதற்கட்ட தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அது வாக்காளர்களின் முடிவுகளை பாதிக்கும் என சொல்லப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கையை 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அதாவது டிசம்பர் 21ம் தேதி நடத்த வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக நேற்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.