புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இண்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கார்ப்ரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.