புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், புதுக்கோட்டை தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைத்து, பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா இன்று (அக். 27) அரசு அதிகாரிகளுடன் இணைந்து தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கனமழையால் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் பேருந்துப் பயணிகள் எவ்வித சிரமமுமின்றிப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாகச் சீரமைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளைத் தற்காலிகமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலின்றியும், மழையால் ஏற்படும் சிரமங்கள் இன்றியும் பயணம் மேற்கொள்ளும் வகையில், அந்தப் பகுதிகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி அங்கிருந்து பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மழைக்காலப் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதுடன், புதிய பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.