மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ.கொக்குளம் ஊராட்சியின் செக்கானூரணியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செக்கானூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து செல்வதற்கான வசதிகள் மட்டுமின்றி, பயணிகள் காத்திருப்பு அறைகள், வணிகக் கடைகள், உணவகங்கள், காய்கறிச் சந்தை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான கட்டமைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள்?
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பேருந்துகளை நிறுத்தி இயக்குவதற்காக 7 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக 27 வணிகக் கடைகள் மற்றும் 2 உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் வசதிக்காக ஆண்களுக்கென 2 காத்திருப்பு அறைகளும், பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கென 2 காத்திருப்பு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து அலுவலகமும், பாதுகாப்புப் பணிகளுக்காகக் காவல்துறை அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக 21 காய்கறிச் சந்தைக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் புதிய கட்டமைப்பு
ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையம், செக்கானூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வணிக நடவடிக்கைகளுக்கும் சந்தை விற்பனைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திறப்பு விழாவில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.