சென்னை பல்கலைக்கழக பேராசிரியை தமிழ்ச்செல்வி தமிழ் மொழியை இழிவு படுத்தும் விதமாக பேசியமைத்து ஜூனியர் ரிப்போர்ட்டர் நிறுவனம் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகவும், தனித்துவமான இலக்கண மரபையும் அளப்பரிய இலக்கிய வளத்தையும் கொண்ட பெருமைக்குரிய தமிழ் மொழியை, ஒன்றுமே இல்லாத மொழியைப் போலக் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஜூனியர் ரிப்போர்ட்டர் தெரிவிக்கின்றது
இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டனத்தில், “ஒரு மொழியின் பெருமையைப் பேசுவதற்கு முன்பு அதன் வரலாற்றையும், இலக்கணச் செழுமையையும், இலக்கிய வளத்தையும் அறிந்திருக்க வேண்டும். பிறந்தால் எப்போது, எவ்வாறு பிறந்தது என்று துல்லியமாகக் கணித்துரைக்க முடியாத அளவுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றையும், தொன்மையான இலக்கிய மரபையும் தன்னகத்தே கொண்டது தமிழ் மொழி. தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள், சங்க இலக்கியங்கள் என உலகையே வியக்கவைக்கும் அறிவுச் செல்வங்களை வழங்கிய மொழி தமிழ்.
இத்தகைய பெருமைமிக்க மொழியைப் பற்றி எவ்வித அடிப்படைப் புரிதலும் இன்றி, அதன் இலக்கணத்தையும் இலக்கிய வளத்தையும் புறந்தள்ளி, தமிழ் மொழி ஒன்றுமே இல்லை என்ற தொனியில் பேசுவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும்.
மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அடையாளம், வாழ்வியல் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் உயிர்நாடி. உலகின் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிடுவது தவறு என்றால், தமிழ் மொழியின் பெருமையை அறியாமல் அதனை இழிவுபடுத்துவது அதைவிடப் பெரிய தவறு.
தமிழின் பெருமையைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் தொன்மையும், இலக்கண வளமும், இலக்கியச் செழுமையும் உலக வரலாற்றில் ஏற்கெனவே தனக்கான இடத்தைப் பெற்றுள்ளன. எனவே, தமிழின் மாண்பைக் கொச்சைப்படுத்தும் இத்தகைய கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்து பேச வேண்டும்” என ஜூனியர் ரிப்போர்ட்டர் இதழ் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.