சென்னை: சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் பூமிக்கடியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டப் பணிகள் அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்கவும், புதிய பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேசிய அதிவேக ரயில் கழகம் புதிய டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 2024 செப்டம்பர் மாதத்தில் சென்னை- பெங்களூரு- மைசூரு வழித்தட புல்லட் ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சென்னை- பெங்களூரு இடையேயான பகுதிக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக கோரப்பட்டுள்ள இந்த டெண்டர் மூலம், அடுத்த 150 நாட்களுக்குள் நில அளவை, மண் பரிசோதனை மற்றும் வழித்தட மறுஆய்வுப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புல்லட் ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள கூவம், பாலாறு போன்ற முக்கிய ஆறுகளைக் கடக்கும்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரிவான வெள்ள அபாய மற்றும் நீரியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை பகுதிகளை கடக்கும் இடங்களில் மேம்பால ரயில் பாதைகளை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.