புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, மருத்துவப் பயனாளிகளின் வருகைப் பதிவேடு, மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனையின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சிகிச்சைக்காக வந்திருந்த தாய்மார்களைச் சந்தித்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியின் அவசியம், அதன் பயன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பயனாளிகள் உடனிருந்தனர்.