பிரதமர் மோடியை தேநீர் விற்பவர் போல் சித்தரித்து மலினமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராகினி நாயக் வெளியிட, அது தற்போது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தனது இளம் வயதில் தந்தைக்கு உதவியாக குஜராத் வாத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்ததாக தகவல்கள் உண்டு. அதை பிரதமரே பல மேடைகளில் கூறியிருக்கிறார். மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக, தேசப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால்தான் நான் நாட்டின் பிரதமராக ஆனேன் என்று மோடி கூறியிருக்கிறார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் பல நேரங்களில் பிரதமரையும் தேநீர் விற்பனையையும் வைத்து பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த கேலிகளுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு சர்வதேச அரங்கில் சிவப்புக் கம்பள வரவேற்பு பின்னணியில் பிரதமர் மோடி தேநீர் விற்பது போல் வீடியோ ஒன்றை ஏ.ஐ.-யில் உருவாக்கி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகினி நாயக் என்பவர் வெளியிட்டுள்ளார்.
இவர் மருத்துவர் எனத் தெரிகிறது. காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் இவர், இவ்வாறாக தனிநபர் விமர்சனத்தை மிகவும் மலினமான சிந்தையோடு நாட்டின் பிரதமருக்கு எதிராக முன்னெடுத்துள்ளதற்கு அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.