புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வெளியிட்டுள்ள பதிவில், ஜோசியர் கூறியதாகச் சொல்லப்படும் சென்டிமென்ட் காரணமாகவே அரசு விழா இடம் மாற்றப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஏற்பாடுகள் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் அவற்றை மாற்றுவது எந்த வகையில் நியாயம் என்றும், முதலமைச்சர் வருகைக்காக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியைப் பாதிக்காதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக சிக்கன நாளில் சிக்கனத்தின் அவசியம் குறித்து பேசிய முதலமைச்சர், புதுக்கோட்டை வருகைக்காக சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு தடுப்புகள் அமைத்து பல கோடி ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் செலவுகள் அவசியம்தானா என்றும் விமர்சித்துள்ளார்.
"ஆட்சி நடத்த ஜோசியர் எதற்கு CM Bro?" என்ற கேள்வியுடன் தனது பதிவை முடித்துள்ளார்.