புதுக்கோட்டை, நவ.1:

புதுக்கோட்டையில் ரூ.24.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை நாளை திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிலுவையில் உள்ள முக்கியத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதுடன், புதிய திட்டங்களையும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதில், ஒன்றிய அரசின் அனுமதி பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்த ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ள திருவப்பூர் மேம்பாலப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற மேலும் ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.32 கோடி செலவிடப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், புதுக்கோட்டை நகரின் அடிப்படைத் தேவைகளான பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றையும் விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையோ, இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டும் புதிய திட்டங்களை அறிவிப்பதையோ தவிர்த்து, மாவட்டத்தின் உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் தனது வீடியோ பதிவில் டாக்டர் முத்துராஜா வலியுறுத்தியுள்ளார்.

நாளை புதுக்கோட்டைக்கு வருகை தரும் முதலமைச்சர், புதிய பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் உள்விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைப்பதுடன், திருவப்பூர் மேம்பாலம் உள்ளிட்ட நிலுவைத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.