புதுக்கோட்டை, அக். 25:


புதுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மலையப்பா நகர், கம்பன் நகர், பெரியார் நகர், சத்தியமூர்த்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதைத் தடுக்கவும், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்தைச் சீரமைக்கவும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ. களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


இதன் தொடர்ச்சியாக, பெய்த கனமழையால் புதுக்கோட்டை மாநகராட்சியின் 35-வது வார்டுக்கு உட்பட்ட கலீப் நகர் பகுதியில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேரில் சென்ற டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., மழைநீர் தேங்கியுள்ள இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுப்பதற்கும், சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி போக்குவரத்தைச் சீரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் வடிகால் வசதிகளை முறையாகச் சீரமைத்து, பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


இந்தக் கள ஆய்வு மற்றும் சீரமைப்புப் பணிகளில் அரசு அதிகாரிகளும், கழக நிர்வாகிகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பையும், இயல்பு வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.