விருதுநகர்: விருதுநகர் அருகே இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதால், கலவரத்தை தடுக்க விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியபட்டி கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவரது மகன் அனஞ்சன் (19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ராம்குமார் (18). இவரும் அருகே உள்ள மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட கொக்கலாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ராம்குமார் கடந்த வாரம் தனது மற்றொரு நண்பரான கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த மகாராஜன் (25)என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, ராம்குமார் காதலிக்கும் இளம்பெண்ணின் தாயாருக்கும் தனக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறி மகாராஜன் அது தொடர்பான வீடியோக்களை ராம்குமார் காதலிக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமாரிடம் அவரது காதலி நேற்று முன்தினம் கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் தனது நண்பர் அனஞ்சன் உள்ளிட்டோருடன் கொக்கலாஞ்சேரிக்கு சென்று மகாராஜனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். தலையில் பலத்த காயமடைந்த அஞ்சன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக இன்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இரு தரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் காரணமாகவும் சத்திரரெட்டியபட்டிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதையடுத்து, கூடுதல் எஸ்.பி. கருப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் சத்திரரெட்டியபட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.