சென்னை வடபழனி பகுதியில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நேரடியாகக் களமிறங்கிய அமைச்சர் பிரபுவிடம், அப்பகுதி மக்கள் தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, “எங்கள் பகுதிக்கு ஒரு அமைச்சர், எம்.எல்.ஏ. வருவது இதுதான் முதல் முறை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சார். இந்த இடம் கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய மக்கள், இப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு மட்டுமின்றி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பிரபு, மழைநீரை அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பத்து ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் வடபழனி பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.