சமீபத்திய வங்கதேச அரசியல் சூழல்கள் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2026 ஐ.பி.எல் தொடருக்கான தங்கள் அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைக்கியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அங்கு நிலவும் சமீபத்திய சூழல்களைக் கருத்தில் கொண்டு, முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கே.கே.ஆர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு மாற்று வீரரை அவர்கள் கோரினால், அதற்கு பி.சி.சி.ஐ அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார்.
பி.சி.சி.ஐ. இந்த முடிவுக்கான உறுதியான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதன் பின்னணியில், வங்கதேச வீரரை அணியில் சேர்த்ததற்காக கே.கே.ஆர் அணி மற்றும் அதன் உரிமையாளர் ஷாருக்கான் மீது சில இந்திய ஆன்மிக மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்ததே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், 9.2 கோடி ரூபாய்க்கு முஸ்தபிசுர் ரஹ்மானை கே.கே.ஆர் வாங்கியிருந்தது. 2026 சீசனுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே வங்கதேச வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.