இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், சாலை நெரிசலை கட்டுப்படுத்துவதிலும், ஏழையெளிய மக்களை குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு அழைத்துச் செல்வதிலும், நீண்ட தூர சரக்குகளை கையாள்வதிலும் ரெயில் போக்குவரத்து பெரும் பங்கினை வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வாகன வரி உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றால் சாலைப் போக்குவரத்துக் கட்டணங்கள் கணிசமாக அவ்வப்போது உயர்ந்து வருகின்ற நிலையில், ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரெயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
நாட்டில் தற்போது உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏழையெளிய மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரெயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.