முன்னாள் ராணுவ வீரா்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு (இ.சி.ஹெச்.எஸ்) கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், மாற்றுத்திறனாளி பாதுகாப்பு படையினருக்கான ஓய்வூதியத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கக் கோரியும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
அந்த கடிதத்தில், பாதுகாப்புப் படையினருக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இசிஹெச்எஸ் திட்டம் தொடங்கப்பட்டது. அது சிறப்பாக செயல்பட போதிய நிதி அவசியமாகும். ஆனால் தற்போது போதிய நிதியில்லாமல் அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நிதி மசோதாவில் மாற்றுத்திறனாளி பாதுகாப்புப் படையினா், பணியில் தொடரும்பட்சத்தில் அவா்களுக்கு அளிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மீது வரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்காக சேவை செய்த பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து ஆதரவும் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆதலால், இ.சி.ஹெச்.எஸ் திட்டத்துக்கு நிலுவையில் உள்ள பாக்கி தொகை அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அதேபோல், மாற்றுத்திறனாளி பாதுகாப்புப் படையினருக்கான ஓய்வூதியத்துக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும் அந்தக் கடிதத்தின் நகலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கும் ராகுல் காந்தி அனுப்பியுள்ளாா்.