மதுரை: உரிய கொள்கை முடிவு எடுக்கும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கானது, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தரப்பு கூறுகையில், பைக் டாக்சி குறித்து ஒரு குழு அமைத்து இந்த விவாகரத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டி உள்ளது. தமிழக அரசு ஒழு குழு அமைத்து, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியது உள்ளது. அந்த முடிவு எடுக்கப்படும வரை தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பைக் டாக்சிக்கு தற்போது அனுமதி இல்லை என்றால் அதை ஏன் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தக்கூடாது. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பாளர்கள் ஆவர்? என்று கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், மத்திய அரசு பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசின் சட்டம் தான் செல்லும். எனவே தமிழக அரசு பைக் டாக்சிக்கு அனுமதி மறுக்க முடியாது என்று வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு கூறியதாவது; தமிழக அரசு பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குமா? இல்லையா என்பது பற்றி விரைவில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினர்.