கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா வெள்ளியும், யஷ் வீர் சிங் வெண்கலமும் வென்றனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி, கிளாஸ்கோ ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒலிம்பிக் சாம்பியன் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இந்திய புயல் நீரஜ் சோப்ரா, மற்றொரு இந்திய வீரர் யஷ் வீர் சிங் மற்றும் வளர்ந்து வரும் இலங்கை நட்சத்திரம் ருமேஷ் பதிரகே ஆகியோருக்கு இடையேயான கடும் போட்டி நிலவியது.
போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே, தனது இரண்டாவது முயற்சியில், 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். இறுதிவரை இந்த தூரத்தை வேறு எந்த வீரராலும் முறியடிக்க முடியாமல் போகவே, காமன்வெல்த் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் நம்பிக்கை நாயகன் நீரஜ் சோப்ரா, தனது சீசனின் சிறந்த செயல்பாடாக 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடைசி முயற்சி வரை தங்கத்திற்காக போராடிய போதிலும், 89.75 மீட்டரைத் தாண்ட முடியவில்லை. மற்றொரு இந்திய வீரரான யஷ் வீர் சிங் தனது ஆறாவது மற்றும் கடைசி முயற்சியில், 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து (தனது தனிநபர் சிறந்த பதிவு), ஒலிம்பிக் பதக்க வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸைப் பின்னுக்குத் தள்ளி, வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் பதக்க மேடை ஏறி சாதனை படைத்துள்ளனர்.