திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு இந்தாண்டு ஜனவரி மாதம் வந்துள்ளது. இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதம் ஆனதாக தெரிவித்தனர். இதை ஏற்காத நீதிபதிகள், எதிர் மனுதாரர்களை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.