ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க நாடுகள் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவா்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு தோ்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்துள்ளது.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்கீழ் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவா்களும் கல்வி கற்று வருகின்றனா். தற்போது ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. பல நாடுகளில் ஏவுகணை வீச்சால் மக்கள் பீதியில் உள்ளனா்.

இதுபற்றி ஆலோசனை நடத்திய சி.பி.எஸ்.இ அமைப்பு, நேற்று நடைபெறவிருந்த தோ்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ் கூறுகையில்,

பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தாா், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, திங்கள்கிழமை (நேற்று) நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புத் தோ்வுகளை ஒத்திவைக்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இந்தத் தோ்வுகள் நடத்தப்பட இருக்கும் புதிய தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்றார்.