கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் குத்துச்சண்டையில் இந்தியாவின் ப்ரீத்தி தங்கம் வென்று அசத்தினார்.

குத்துச்சண்டை போட்டியின் 54 கிலோ எடைப்பிரிவின் பைனலில் இந்தியாவின் ப்ரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் சவான்னாவை எதிர்த்து விளையாடினார். ஆரம்பத்தில் கனடா வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், சுதாரித்துக் கொண்டு விளையாடிய ப்ரீத்தி சிறப்பாக செயல்பட்டார். இதனால், ப்ரீத்தி முதல் சுற்றில் 5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து, 2வது சுற்றில் ப்ரீத்தியின் துல்லியமான பஞ்ச்சுகளால் ஸ்கார்லெட் சவான்னா நிலைகுலைந்து போனார். இதனால், 2வது சுற்றிலும் 5 புள்ளிகளை அள்ளினார். இதன்மூலம், 10 புள்ளிகளுடன் ப்ரீத்தி தங்கம் வென்று அசத்தினார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கம் இதுவாகும்.

2026 காமன்வெல்த் போட்டியில் இதுவரையில் 7 தங்கம், 13 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 27 பதக்கங்களுடன் பட்டியலில் 6 வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.