மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உன்னி கிருஷ்ணன்(89) கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1971 முதல் 1996 வரை கேரள மாநிலம் வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989-90ல் வி.பி. சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய மேற்பரப்பு போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். வளைகுடா போரின் போது குவைத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கே.பி. உன்னிகிருஷ்ணன் மிக திறமையாகவும், துரிதமாகவும் செயல்பட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகையாளராக பணியாற்றி உள்ளார். இவர் முதல்கட்ட அரசியல் பயணத்தை வடகராவில் இருந்து 1971-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்ததாக உன்னிகிருஷ்ணனின் நெருங்கிய ஆதரவாளரான வி.கே. கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய அவர், மீ்ண்டும் காங்கிரசில் 1995-ல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.