மதுரை மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 70 தொகுதிகள் வரை வேட்பாளர்களை தலைமை இறுதி செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் வென்றது. மீதமுள்ள தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. இந்த முறை த.வெ.க, நாம் தமிழர் கட்சிகள் பிரிக்கும் வாக்குகளால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. இந்த முறை மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு, சோழவந்தான், திருமங்கலம், மேலூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் உசிலம்பட்டி, கிழக்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடனான நிலைப் பாட்டைப் பொருத்து அ.தி.மு.க. போட்டியிடவும் வாய்ப்புள்ளது. அ.தி.மு.க.வினர் பெரிதும் எதிர்பார்த்த மதுரை மத்திய தொகுதி, இந்த முறை அ.ம.மு.க.வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது.
அ.ம.மு.க. மேலூரை கேட்ட நிலையில், தற்போது எம்.எல்.ஏ. உள்ளதால் அத்தொகுதியை அ.தி.மு.க. விட்டுக்கொடுக்க தயாரில்லை. இதனால், மதுரை மத்தி அல்லது மதுரை வடக்கு கேட்டதாகவும், அதற்கு அ.தி.மு.க. தரப்பு மதுரை மத்திய தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. அ.ம.மு.க. தொடங்கிய காலம் முதல் டிடிவி. தினகரனுடன் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரைக்காக அ.ம.மு.க., மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கேட்டு பெற்று அவரை வேட்பாளராக நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் மத்திய தொகுதியை எதிர்பார்த்து எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயபால், சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த முன்னாள் துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி போன்றோர் கேட்பதாகவும், ஆனால், இவர்கள் மூவருமே சமீபத்தில் கட்சியில் இணைந்ததால் இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று மாநகர அ.தி.மு.க.வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதனால், எந்த பஞ்சாயத்தும் வேண்டாம் என்று அ.தி.மு.க. மேலிடம் இந்த தொகுதியை அ.ம.மு.க.வுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், இத்தொகுதி ‘சீட்’டை எதிர் பார்த்திருந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.