மதுரை, அக். 22:

அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்களைத் தூய்மையாகப் பராமரிக்கும் நோக்கில், அக்டோபர் 2 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் 6.0-ன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, பழனி, ராஜபாளையம், சாத்தூர், காரைக்குடி மற்றும் கொடைக்கானல் ரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம், ரயில் நிலையங்களின் தூய்மையை மேம்படுத்துவதற்கான பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. மேலும், தூய்மைப் பணிகளில் பயணிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா கலந்து கொண்டு, பயணிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், மதுரை ரயில்வே கோட்டத்தில் 16 முக்கிய ரயில் நிலையங்களை உயர்தரத்தில் தூய்மையாகப் பராமரிப்பதற்காக நவீன இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரியல் கழிப்பறைகள் (பயோ டாய்லெட்கள்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ரயில் பாதைகளில் மனிதக் கழிவுகள் நேரடியாக வெளியேறுவது தவிர்க்கப்பட்டு, தூய்மையான பராமரிப்பு மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முக்கிய ரயில்களில் உள்ள உயிரியல் கழிப்பறைகளில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், காற்றழுத்தத்தின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி சுத்தம் செய்யும் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

பயணிகளுக்கு சுத்தமான பயணச் சூழலை வழங்கும் நோக்கில், 12 முக்கிய ரயில்களில் நடமாடும் தூய்மைப் பணியாளர் குழுக்கள் மூலம் பயணத்தின்போதே ரயில் பெட்டிகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், ரயில் பெட்டி பராமரிப்பு மையங்களிலும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் ரயில் பெட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ரயில்களில் தூய்மை தொடர்பான குறைபாடுகள் மற்றும் புகார்களைப் பயணிகள் எளிதில் தெரிவிக்கும் வகையில், ‘ரயில் மித்ரா’, ‘ரயில் மதாத்’ உள்ளிட்ட இணையதள வசதிகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைபாடுகளைச் சரிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதில் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகளுடன் பயணிகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என வலியுறுத்திய அவர், ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்தும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள உணவுக் கடைகளின் வெளிப்புறப் பகுதிகளில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு பயணியின் சமூகப் பொறுப்பும் ஆகும். தூய்மையான ரயில் நிலையங்கள், சுகாதாரமான பயணச் சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மை விழிப்புணர்வு முகாம் 6.0 முன்னெடுக்கப்பட்டு வருகிறது.