மதுரை, அக். 22:
தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தரமான அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பதுக்கலைக் கட்டுப்படுத்தவும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் மதுரையில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை கிழக்கு வட்டம், கடச்சனேந்தலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, நெல் அரவைப் பணிகள், அரிசி உற்பத்தி, அரிசியின் தரம், நெல் மற்றும் அரிசி இருப்பு, கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் நிலை உள்ளிட்டவற்றை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் முன்னிலை வகித்தார்.
சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,750 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி, தரமான சன்ன ரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரிசி உற்பத்தி மற்றும் விநியோகப் பணிகளின் முன்னேற்றம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
திறந்தவெளி நெல் சேமிப்புக்கு முற்றுப்புள்ளி!
மழை உள்ளிட்ட இயற்கைச் சூழல்களால் திறந்தவெளியில் சேமிக்கப்படும் நெல் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பான கிடங்குகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சுமார் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு மூடப்பட்ட கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 மற்றும் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளைத் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உணவுப் பொருட்கள் பதுக்கினால் கடும் கண்காணிப்பு!
அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள், முகவர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பதுக்கலைக் கட்டுப்படுத்த அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபுரம் மற்றும் திருமங்கலம் கப்பலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, செறிவூட்டப்பட்ட பாமாலின் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, தரம், சேமிப்பு முறை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சுகி பிரமிளா, மதுரை கிழக்கு வட்டாட்சியர் அசோக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மதுரை அலுவலக தர கட்டுப்பாட்டு அலுவலர் கார்த்திக் , மதுரை மண்டல குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (Civil Supplies CID) காவல் துணை கண்காணிப்பாளர் (DSP)
சிவகுமார், காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு தரமான அரிசி, விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை, பாதுகாப்பான நெல் சேமிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் துறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.