கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு – காவல்துறையைக் கண்டித்து நூதனப் போராட்டம்

மதுரை:

மதுரை மாநகரில் 80 வயது மூதாட்டியும் அவரது மகளும் தங்குவதற்கு வீடு இல்லாமல், காவல் ஆணையர் அலுவலகத்திலேயே இரவு தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மருதம்மாள், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ஜெய்சங்கர் என்பவர், மருதம்மாளின் உடைமைகளை வீட்டிலிருந்து வெளியே எறிந்துவிட்டு, வீட்டைப் பூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருதம்மாள் தரப்பினர், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மருதம்மாள் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, மருதம்மாளின் மகள் தனலட்சுமி நேற்று இரவு மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, தங்களது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முறையிட்டுள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து விசாரிக்கச் செய்வதாக காவல் ஆணையர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இன்று வரை கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மருதம்மாளும் அவரது மகள் தனலட்சுமியும் வேதனை தெரிவித்துள்ளனர்.

80 வயதான மூதாட்டி தனது உடைமைகளுடன் தங்குவதற்கு இடமின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் இருவரும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலேயே இரவு தங்கியுள்ளனர்.

வாடகை வீடு தொடர்பான பிரச்சினையில் வயது முதிர்ந்த மூதாட்டி வீடின்றித் தவிப்பதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, மூதாட்டியின் உடைமைகளை மீட்டுத் தருவதுடன், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

காவல் ஆணையர் அலுவலகத்திலேயே மூதாட்டியும் மகளும் இரவு தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காண்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.