த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பெரம்பூரில் கடந்த 22-ம் தேதி நடந்த த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் விஜய் போட்டியிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

நமது முதல் கூட்டத்தைச் சென்னை பெரம்பூரில் நடத்த முடிவு செய்ததற்குக் காரணம் உள்ளது. பெரம்பூரில் குறுகிய காலத்திலேயே 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான மிகப்பெரிய சான்று இது. சென்னையை தி.மு.க.வின் கோட்டை என்று சொல்வார்கள். அதனால்தான், இங்கு அ.தி.மு.க.வே போட்டியிடத் தயங்கும். வடசென்னை பகுதியான பெரம்பூர் தொகுதியில் நமது தலைவர் (விஜய்) நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் இது முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது. ஏனெனில், வி சென்டிமென்ட் காரணமாக விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில்தான் விஜய் களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு மாறாக பெரம்பூர் தொகுதியை விஜய் தேர்ந்தெடுக்கக் காரணம், அங்கு அடித்தட்டு மக்கள் அதிகம் இருப்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமாக வசிப்பதும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.