சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையில் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈட்டப்பட்ட வருவாயைக் காட்டிலும் ரூ.147 கோடி அதிகமாகும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறையின் அக்டோபர் மாதப் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிப்பது, விரைவாக எதிர்வாதுரைகளைத் தயாரிப்பது, வழக்குகளைத் தொடர்வது உள்ளிட்ட துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட AI தொழில்நுட்பச் செயலியின் பயன்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் அனைத்து துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:
பதிவுத்துறையில் 2026 அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் ரூ.147 கோடி கூடுதலாகும்.
தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டத்தின் மூலம் நவம்பர் 3-ஆம் தேதி வரை 2,46,260 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மனைப்பிரிவுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள் மற்றும் ரசீது ஆவணங்கள் அடங்கும்.
மேலும், நிலுவையில் உள்ள ஆவணங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆவணங்களைப் பதிவு செய்த அன்றே எவ்வித காலதாமதமுமின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்டப் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி முழுமையாக வசூலிப்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்டும் வகையில் அனைத்து பதிவுத்துறை அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறைத் தலைவர்கள் மற்றும் பதிவுத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.