பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், பாராளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வரும் 30-ம் தேதி (இன்று) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை விளக்கியுள்ள அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, பாராளுமன்றம் அமைதியாக நடைபெறும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் விரும்பும் எந்தவொரு தலைப்பு குறித்தும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரில் பாதுகாப்பு ஆய்வு விவகாரத்தை மீண்டும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பின்மை, மணிப்பூர் நிலவரம், வாக்காளர் பட்டியல் குளறுபடி, எஸ்ஐஆர் விவகாரம் மற்றும் ரயில் விபத்துகள் போன்ற முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து ஒன்றிய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க இண்டியா கூட்டணி கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன.
அண்மையில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசின் தரப்பிலும், மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இன்று 30-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எட்டப்படும் ஒருமித்த முடிவுகள் இத்தொடரின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது