நீட் வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய அமைச்சர் பதவி விலக வலி​யுறுத்​தி, ஜூலை 20 நாடளுமன்றத்தை முற்​றுகை​யிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்​தி​யதுடன், கண்ணீர் புகைக்​குண்டு​களை வீசி​யும் கூட்டத்தை கலைத்​தனர். இதற்கிடையில், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மாணவர்களுக்கு ஆதர​வாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்​லம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்​ளிட்ட காங்​கிரஸ் கட்​சி​யினரைப் போலீ​ஸார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று பேருந்​துகளில் ஏற்றிச் சென்றனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூவலைதள பதிவில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம். நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.