பழநி: பழநி கோயில் நிலமோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வலியுறுத்தி ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.பி.பரமசிவம் கூறும்போது, “பழநி கோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி நடந்திருப்பது என்பது ஆண்டவனுக்காக அறம் செய்ய வருகிற ஆன்மிக பெரியோர்களை அச்சத்தில் ஆழ்த்துகிற விதமாக இருக்கிறது. இதற்கு விஜய் தலைமையிலான தவெக அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இந்த முறைகேட்டில் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது. எனவே, பொதுவான அமைப்பான சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள், சொத்துகளின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போது தான் ஆன்மிகப் பணி, மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறதா அல்லது தனி நபர்களின் லாபத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறதா என தெரியவரும். இந்த நில முறைகேட்டை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி பழநியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.