பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் வழிக்காட்டும் தலைவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சட்டவிதி இப்போது உள்ள பெரிய தலைவர்களுக்கு பொருந்துமா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். அதற்கு அமித்ஷா ஒற்றை வரியில் கொடுத்த பதில் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் சென்றார். அதன்பிறகு கொல்கத்தாவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜியின் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஒருவர்,

பா.ஜ.க.வில் 75 வயது நிரம்பியவர்கள் வழிக்காட்டுதல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த ரூல்ஸ் இப்போது உள்ள பெரிய தலைவர்களுக்கு பொருந்துமா? என்ற கேள்வியை எழுப்பினார். பா.ஜ.க.வில் 75 வயதை கடந்ததாக கூறி எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட பல தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். தற்போது பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை அடைந்தார். இதனால் பிரதமர் மோடிக்கு ஓய்வு வழங்கப்படுமா? என்பதை மனதில் வைத்து அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதனால் அமித்ஷாவின் முகம் மாறியது. கோபப்படுவது போல் அவர் முகபாவனை இருந்தது. இருப்பினும், அவர் எங்களின் கட்சியை பற்றி கவலை கொள்ள வேண்டாம். மேற்கு வங்கத்தை பற்றி கவலைப்படுங்கள் என்று சிரித்தபடி கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.