வாஷிங்டன்: உலகளாவிய நன்மதிப்பு ஆய்வில் அமெரிக்காவை, முதன்முறையாக சீனா முந்தியுள்ளது. பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான அறிக்கையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்து உள்ளது.
பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்துக்கணிப்பில், உலகளாவிய செல்வாக்கு மற்றும் நற்பெயர் கொண்ட நாடுகளின் பட்டியலில் தான் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. சீனா மீதான நம்பகத்தன்மை அண்மை காலங்களில் பல நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்காவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கும் பியூ ஆராய்ச்சி மையம், உலகளவில் செல்வாக்கை நிலைநாட்ட இரு வல்லரசுகளும் போட்டியிட்டு வரும் சூழலில், அமெரிக்காவின் சில நட்பு நாடுகளில் கூட மனநிலை மாறியுள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவையே உலகின் பலரும் சாதகமான நாடாக பார்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. இந்த பட்டியலை தயாரிக்க ஆய்வு செய்யப்பட்ட 36 நாடுகளில், சுமார் 25 நாடுகள் அமெரிக்காவை விட சீனாவையே அதிகம் விரும்புகின்றன. அதே போல கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகள்கூட இப்போது அமெரிக்காவை விட, சீனாவிற்கு அதிக ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.