தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளத்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.கலர் அப்பளத்தை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விதித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் விரும்பும் கண்ணைக் கவரும் வண்ணமயமான ‘கலர் அப்பளங்களை’ குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டாம் என்றும், அவை உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இரசாயன நிறமூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த அப்பளங்களைச் சாப்பிடுவதால், குழந்தைகளுக்குப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும் குழந்தைகளுக்குத் தோலில் அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் போன்ற குறைபாடுகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வளாகங்களில் இந்த கலர் அப்பளங்களை விற்பனை செய்ய கூடாது என தயாரிப்பாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக நிறமூட்டிகளை பயன்படுத்தி அப்பளம் விற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் கலந்த இத்தகைய ஆபத்தான உணவுகளுக்கு மாற்றாக, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையிலான உணவுகளுக்கு மாற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அதன்படி, உடலுக்கு எவ்வித கெடுதலும் தராத, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உளுந்து அப்பளம் மற்றும் அரிசி அப்பளம் உள்ளிட்டவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்று உணவு பாதுகாப்புத்துறை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, நிற மூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.