மதுரை, நவ.3:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவினில் பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.7.15 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் கிராமம் தோறும் பால் சேகரிக்கப்பட்டு, ஆவின் நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


மேலும், நெய், இனிப்பு வகைகள், பால் பொருட்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பணிகள் வேகமடைந்துள்ளன.


இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், மதுரை ஆவின் மூலம் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தி பால் பாக்கெட்டுகளாகவும், பால் உபபொருட்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


தீபாவளி பண்டிகைக்காக 5 நாட்களே உள்ள நிலையில், மதுரை ஆவின்பால் பொருட்கள் மற்றும் நெய், பால் கோவா, பன்னீர், பாதாம் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயனடையலாம். இதற்காக பணியாளர்கள் தற்போது மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.7.15 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.