கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே வரலாற்றின் பக்கங்களுக்குள் பயணிக்கும் உணர்வு... வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர்கள் பெரிய மருது – சின்ன மருது ஆகியோரின் வீரத்தையும், போர் பயிற்சிகளையும் நினைவூட்டும் சங்கரபதி கோட்டை!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை, பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் வீர வரலாற்றின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கிறது. காலத்தின் கோரப்பிடியில் சிதிலமடைந்து, புதர் மண்டிக் கிடந்த இந்த வரலாற்றுச் சின்னம் தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் பாரம்பரியக் கட்டடப் பாதுகாப்புப் பிரிவு மூலம் பழமை மாறாமல் மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.


இந்தக் கோட்டையின் வரலாறு என்பது வெறும் செங்கற்களாலும் கற்களாலும் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் வரலாறு மட்டுமல்ல. தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும், சிவகங்கைச் சீமையை ஆண்ட முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவரின் ஆட்சிச் சிறப்பையும், மருது சகோதரர்களின் போர்த்திறனையும் தன்னகத்தே சுமந்து நிற்கும் வரலாற்றுக் கருவூலமாகும்.


ராமநாதபுரம் சேதுபதி மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளாகப் பிறந்த வேலுநாச்சியார், சிறுவயதிலேயே வாள் வீச்சு, சிலம்பம், வளரி எறிதல், குதிரையேற்றம், வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு போர்க்கலைகளில் பயிற்சி பெற்றவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இத்தகைய வீரமும் அறிவும் நிறைந்த வேலுநாச்சியாரை, சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரான முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவருக்கு மணமுடித்து வைத்தபோது, அவருக்குச் சீதனமாகச் சங்கரபதி கோட்டையும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


அக்காலத்தில் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முக்கியப் பாசறையாக இந்தக் கோட்டை விளங்கியதாகக் கூறப்படுகிறது. குதிரைகளைப் பராமரித்தல், படைவீரர்களுக்குப் பயிற்சி அளித்தல், போருக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் எனப் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளுடன் இந்த இடம் தொடர்புபடுத்தப்படுகிறது.


சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் ஆட்சிக் காலத்தில் அவருக்குப் படைத்தளபதிகளாக விளங்கிய பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள் தங்களது வீரத்தாலும் போர்த்திறனாலும் தனி முத்திரை பதித்தனர். வளரி வீச்சில் வல்லவர்களாகவும், சிறந்த போர்த்தந்திரங்களை வகுப்பவர்களாகவும் விளங்கிய இவர்கள், பின்னாளில் வேலுநாச்சியாரின் அரசாட்சியை மீட்டெடுப்பதிலும் சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்திலும் முக்கியப் பங்காற்றினர்.


1772-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் படையெடுப்பில் காளையார்கோவில் போரில் முத்து வடுகநாதர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் சிவகங்கையை விட்டு வெளியேறினார். திண்டுக்கல், விருப்பாட்சி பகுதிகளில் தஞ்சமடைந்து, மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆதரவையும் மருது சகோதரர்களின் படைபலத்தையும் திரட்டினார். சுமார் எட்டு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு 1780-ஆம் ஆண்டு சிவகங்கை அரசாட்சியை மீண்டும் கைப்பற்றி ஆட்சி பொறுப்பேற்றார். இது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீர வரலாறாகும்.


இத்தகைய பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட சங்கரபதி கோட்டை, காலப்போக்கில் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து, புதர்கள் சூழ்ந்து, மனிதர்கள் நடமாட்டமின்றி மறைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. வரலாற்று ஆர்வலர்களும் பொதுமக்களும் இக்கோட்டையைப் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதன் தொடர்ச்சியாக, சுமார் ரூ.9.03 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் பாரம்பரியக் கட்டடப் பாதுகாப்புப் பிரிவு மூலம் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. பழமையான கட்டடத்தின் தன்மையும் கட்டுமான முறையும் மாறாமல் இருக்க, பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி கலந்த கலவை உள்ளிட்ட பழங்காலக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைய தகவலின்படி, பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று இந்தக் கோட்டையின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது, அது வெறும் பழமையான கட்டடத்திற்குள் நுழையும் அனுபவமாக மட்டும் இருக்காது. ஒவ்வொரு தூணையும், ஒவ்வொரு சுவரையும், ஒவ்வொரு கட்டுமான அமைப்பையும் பார்க்கும்போது, அவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வீர வரலாற்றை மனம் தேடத் தொடங்குகிறது.


இந்த மண்ணில்தான் வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தின் தடங்கள் பதிந்திருக்கின்றனவோ என்ற எண்ணம் மனதில் எழுகிறது. இந்தக் கோட்டை வளாகத்தில் எத்தனையோ வீரர்கள் போர்ப் பயிற்சி பெற்றிருப்பார்களே, வாள் சுழற்றியிருப்பார்களே, குதிரைகளின் குளம்பொலி ஒலித்திருக்குமே, போருக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்குமே என்ற கற்பனை நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.


பெரிய மருதுவும் சின்ன மருதுவும் வீரர்களுடன் ஆலோசனை நடத்திய காலத்தையும், முத்து வடுகநாதர் ஆட்சிக் காலத்தின் அரசியல் மற்றும் ராணுவச் சூழலையும், வேலுநாச்சியார் தனது நாட்டை மீட்டெடுக்கத் திட்டமிட்ட வீரப் பயணத்தையும் நினைத்துப் பார்க்கும்போது, இந்தக் கோட்டை வெறும் கற்களால் உருவான கட்டடம் அல்ல; ஒரு வீர சகாப்தத்தின் மௌன சாட்சியம் என்பது புரிகிறது.


ஒருகாலத்தில் போர்ப் பயிற்சிகளாலும் வீரர்களின் நடமாட்டத்தாலும் உயிர்ப்புடன் இருந்த இந்த இடம், இன்று மீண்டும் தனது பழைய கம்பீரத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது.


சிதிலமடைந்த சுவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது கட்டடத்தைப் புதுப்பிப்பது மட்டுமல்ல; மறக்கப்பட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் ஆகும்.


காலம் கடந்தாலும் வீரத்தின் அடையாளங்கள் அழிவதில்லை; அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள்தான் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.


வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர்கள் மருது சகோதரர்கள், முத்து வடுகநாதர் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் நேரில் உணர்ந்து அறிந்துகொள்ளும் வகையில் சங்கரபதி கோட்டை மீண்டும் வரலாற்றின் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.


இனி இந்தக் கோட்டையின் கதவுகள் திறக்கப்படும்போது, பார்வையாளர்கள் காணப்போவது ஒரு பழமையான கோட்டையை மட்டுமல்ல... ஒரு வீர மண்ணின் பெருமையையும், தமிழர்களின் வரலாற்று அடையாளத்தையும், விடுதலை வேட்கையின் அழியாத நினைவுகளையும்தான்!