அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் த.வெ.க.வில் இணையலாம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், திடீர் திருப்பமாக தி.மு.க. அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசி உள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து செங்கோட்டையன் தனது ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், சபாநாயகர் அறையில் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசினார். சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.
செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய இருப்பதாகவும் அவருக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகடும் நேற்று முன்தினம் முதல் அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பின.
இந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக சேகர் பாபுவை சந்தித்து பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைகிறாரா அல்லது தி.மு.க.வில் இணைகிறாரா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஒருநாள் பொறுத்து இருங்கள் என்று கூறினார்.
இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தி.மு.க. உற்சாகமாக கொண்டாட உள்ளது. இதனால், இன்று உதயநிதி முன்னிலையில், செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைகிறாரா? அல்லது விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.