நடப்பாண்டில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள 7545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதினர். மேலும் சிறை தேர்வர்களாக 281 பேரும் எழுதினர். முதல் தேர்வாக நேற்று தமிழ் மற்றும் இதர மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து 5-ம் தேதி ஆங்கில தேர்வும், அதன் பிறகு ஒவ்வொரு பாடங்களுக்கான தேர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறுகிறது.

பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டிருந்தது. அதன்படி தேர்வறை கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 624 பேரும், தேர்வு கண்காணிப்பு படையாக 4 ஆயிரத்து 540 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்காக 7 ஆயிரத்து 465 பேர் சொல்வதை எழுதுபவர்களை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு வருகிற 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வு முடிவு மே மாதம் 8-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.