தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தெரிகிறது. அதில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதில் பல தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார். எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தானதும் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளது.