கோபி, அக். 21:
கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ‘Where Life Meets Art’ என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் பி.என். வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.ஏ. தனலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமது உரையில், “ஆண், பெண் சமத்துவம் என்பது இன்றளவும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகிறது. இளைய தலைமுறையினர், குறிப்பாகப் பெண்கள், தங்களுக்கான உரிமைகள் குறித்து வினா எழுப்பும்போதுதான் சமத்துவம் உண்மையான நிலையை எட்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும் என்றும், தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார். பெண்ணியம், பாலினச் சமத்துவம், பெண்களின் உரிமைகள் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை குறித்த அவரது கருத்துகள் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன.
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஆங்கிலத் துறைத் தலைவர் புஷ்பலதா வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ஜீவ கிறிஸ்டினா நன்றியுரை கூறினார்.