சென்னை: “தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50% கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ.75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது. 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தவெக கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
காவிரி நீரை மாநிலங்களுக்கிடையே பங்கிடுவது பற்றி உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல்வர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.