மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எழுமலை, டி.கிருஷ்ணாபுரம், மெய்யனுத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் கல்விக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.


எழுமலை பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சுகாதார நிலையக் கட்டிடத்தை, மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான SOP. விஜய் மகாலிங்கம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினார்.


இதையடுத்து, எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து, டி.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தையும் எம்.எல்.ஏ. விஜய் மகாலிங்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்விலும் மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


மேலும், மெய்யனுத்தம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் 2 சுகாதார வளாகக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் SOP. விஜய் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துகளுடன் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சார் ஆட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


உசிலம்பட்டி தொகுதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுடன், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.