2024 மக்களவைத் தேர்தல் குறித்து கர்நாடக அரசு நடத்திய சர்வேயில், 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இ.வி.எம். இயந்திரங்கள் மீது காங்கிரஸ் கேள்விகளை எழுப்பும் நிலையில், இந்த சர்வே முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கர்நாடக அரசு நடத்திய இந்த கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 83.61 சதவீதம் பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். இவிஎம் இயந்திரங்களுக்கு ஆதரவாக கூறியவர்களில் 69.39 சதவீதம் பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்றும், 14.22 சதவீதம் பேர் அவை உறுதியாக நம்பிக்கைக்கு உரியது என்றும் ஒப்புக்கொண்டனர்.

இந்தக் கணக்கெடுப்பு பெங்களூரு, பெலகாவி, கலபுரகி மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் உள்ள 102 சட்டமன்றத் தொகுதிகளில் 5,100 பேரிடம் நடத்தப்பட்டது. இது கர்நாடக அரசால், தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்புகுமார் மூலம் நடத்தப்பட்டது.

இந்த சர்வே குறித்து பேசிய கர்நாடக பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி ஒரு கதையைச் சொல்லி நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமற்றவை. தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்று கூறுகிறார். ஆனால் கர்நாடகா இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைச் சொல்லியுள்ளது. மக்கள் தேர்தல்களை நம்புகிறார்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள், மேலும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த ஒரு அறை என்று தெரிவித்தார்.