சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்த ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன் நீல விளிம்புடன் காட்சியளிக்கும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கக மாவட்ட தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முழு கிரகணத்தின் போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் அடர் ஆரஞ்ச் நிறத்தில் தோன்றும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன், பூமி நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும் இம்முறை அது அம்பிரா நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெதுவாக உரசி செல்லும். இதனால் சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும்.
அப்போது மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படும். அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும். இந்திய நேரப்படி மாலை 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்