தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தி.மு.க.வுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்க மாட்டோம். தொகுதி பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எங்கள் கருத்துக்களை கேட்டுக் கொண்டார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. புதுச்சேரியிலும் போட்டியிட வேண்டுமென கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து தி.மு.க.விடம் பேசவில்லை. எண்ணிக்கை முடிவான பிறகே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முதலில் வைத்தது வி.சி.க.தான். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதற்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் கனியவில்லை. ஆகவே நாங்கள் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. காங்கிரசின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல ஏதுமில்லை. நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக கோரிக்கைகள் வைத்துள்ளன. பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்தாலும் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கும். இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். அதில் எவ்விதமாக சந்தேகமும் இல்லை.
தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் பிரதமர் மோடியின் வித்தை எடுபடாது. 2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.