இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுடன் அதிக நெருக்கத்தை இந்தியா காட்டி வருகிறது. இதன் காரணமாக, அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு முடிவுக்கு சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக டிரம்ப்பின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை அந்நாட்டு பார்லி உறுப்பினர்கள் டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து இந்தியா - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது,
அமெரிக்க நலன்களையோ பாதுகாப்பையோ முன்னேற்றுவதற்குப் பதிலாக, இந்த வரிகள் எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. விநியோக சங்கிலிகளைச் சீர்குலைக்கின்றன. அமெரிக்க தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்னையில் தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா-இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று கூறினார்.