அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ஈரான் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருபப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை அமைப்புகள் மூலம் அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.